தை நீராடல்→பாவை நோன்பு

பாவை நோன்பும் அதன் வரலாற்றுப் பரிணாமங்களும்

பாவையர் கூடிச் செய்யும் நோன்பே பாவை நோன்பு. அவ்வளவுதான்.

பாவை நோன்பு என்ற பெயர் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்காது. சங்ககாலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ”தை நீராடல்” ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் சமயம் கலந்து பாவை நோன்பாக மாறியது.

சங்க இலக்கியங்களில் அதிகம் பாடப்பவை எவையெவை என்று தெரிந்து கொள்வது தமிழ்ப்பண்பாட்டை ஓரளவு புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் பெரிதும் கொண்டாடப்பட்ட ஆறு வையை. பெரிதும் கொண்டாடப்பட்ட மாதம் தை.

அகநானூறு புறநானூறு நற்றினை  ஐங்குறுநூறு  கலித்தொகை என்று பல நூல்களில் தைந்நீராடல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பரிபாடலில் தை நீராடல் பற்றி மிக விரிவாகவே தெரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ மாதங்கள் இருக்க தை மாதத்தில் ஏன் நீராட வேண்டும்? அதற்கும் விடை சொல்கிறது பரிபாடல்.

நீரில்லாமல் உலகத்தில் உயிர்கள் இல்லை. அந்த நீரைக் கொடுப்பது மழை. அப்படிப்பட்ட மழையையும் மழைநீர் பெருகிவரும் ஆற்றையும் கொண்டாடுவதுதான் தை நீராடல் அல்லது தைந்நீராடல்.

அடைமழை பெய்வது கார் காலத்தில். அந்தக் கார்(காலம்) திகைவது கார்த்திகை. திகைதல் என்றால் அடங்குதல். அடைமழை அடங்கத் தொடங்குவது கார்த்திகையில். நன்றாகக் கவனிக்கவும். நின்றுவிடுவதல்ல… சிறிது சிறிதாக அடங்குவது.

ஆற்றின் நீரோட்டம் ஆண்டு முழுவதும் ஒரேவிதமாக இருக்குமா? இருக்காது. கார்காலத்தில் பொங்கியும் கோடையில் குறுகியும் ஓடும்.

கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்
நீர் ஒவ்வா வையை (பரிபாடல்/வையை/நல்லந்துவனார்)

கார்காலத்தில் கலங்கியும் வேனிற்காலத்தில் தெளிந்தும் வையை ஆற்றின் நீர்மை எப்போதும் ஒரே விதமாக இருப்பதில்லை. இதுதான் அந்த வரியின் பொருள்.

மழை கடுமையாகப் பெய்யும் பொழுது ஆற்றில் நீராட முடியாது. வெள்ளம் அடித்துக் கொண்டு போகும். கோடையில் நீரோட்டம் குறைவாக இருப்பதால் அதுவும் சுகமாக இருக்காது. வேனிற்காலத்திலோ நீர் தெளிந்து அமைதியாக இருக்கும். அந்த அமைதியில் குளிக்கலாம். ஆனால் எப்படிக் கொண்டாடுவது?

சரி. மழையையும் ஆற்றையும் நீராடிக் கொண்டாட எதுதான் நல்ல காலம்?

கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின் குளத்து (பரிபாடல்/வையை/நல்லந்துவனார்)

கனைக்கின்ற அதிர்குரல் கொண்ட கார் மேகங்கள் பெருமழை பெய்து நீங்கிய பின்
பனி மிகுந்ததால் நடுங்கச் செய்கின்ற குளிர்(பைதல்) நிறைந்த முன்பனிக் காலத்தில்
கதிரவனும் சுடாமல் அவ்வப்போது இறுதிமழையும் பெய்கின்ற பிற்பகுதில்…

இப்போது புரிந்திருக்குமே. சூரியனும் சுடாது. அவ்வப்போது சின்னச் சின்னத் தூறல்கள். கலங்கியடித்து ஓடி வந்த பெருவெள்ளம் சற்று வேகம் குறைந்து ஓடிக்கொண்டிருக்கும். கொண்டாட இதைவிட இனிய பருவம் வேண்டுமா? குற்றாலம் போகின்றவர்கள் சாரல் விழும்போதுதானே போகிறார்கள். அது போலத்தான் வையை ஆற்றில் தை நீராடுவதும்.

இப்படி நீராடுவதைப் பெருமையாக் கருதினார்கள். அதுவும் எவ்வளவு பெருமையாத் தெரியுமா?

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்
தீ எரிப்பாலும் செறி தவம் முன் பற்றியோ
தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி! (பரிபாடல்/வையை/நல்லந்துவனார்)

மையோலை பிடித்த புலவர் (காதல்)விளையாட்டுக்கு மாறுபட்டு எழுந்து
காமத்தின் சுவடு இல்லாமல் விளையாடுகின்ற பாவையர் கூட்டம்
அவரவர் தாயோடு நின்று தைந்நீராடுகின்ற பெரும் பேறு எப்படிப் பெற்றனர்?
தீ வளர்த்து வேள்வி செய்ததாலா? புலன்களை அடக்கித் தவம் செய்ததாலா?
நீயே கூறுவாய் வையை நதியே!

காதல் கவிதை எழுதி மயக்கும் காதலனைக் கூட நினைக்காமல் தூய்மையான உள்ளத்தோடு அவரவர் தாய் பக்கத்தில் இருக்க பாவையர் தைந்நீராடினார்களாம்.

இந்தத் தைந்நீராடல் நடந்த நளிமாரிப் பின்குளம் என்று பரிபாடல் குறிப்பிடும் பருவம் மார்கழி மாதத்தின் பிற்பகுதி. சரி. அது தொடங்குவது எப்போது?

மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை” நாளில் இந்தத் தை நீராடல் தொடங்குகிறது. அதாவது நிலவானது முழுதாக வளர்ந்து அதன் களங்கம்(மறு) தெளிவாகத் தெரிகின்ற ஆதிரை நாளில் தொடங்கும். மொத்தம் முப்பது நாட்கள் நடக்கும் இந்த நீராடல். மார்கழி பாதியில் தொடங்கி தை பாதியில் முடிகின்றதால் இதற்குப் பெயர் தைந்நீராடல் என்று வந்தது.

இதுதான் பாவை நோன்பின் முன்னோடி.

பரிபாடல் சங்க இலக்கியங்களில் கடைசியாக எழுதப்பட்டது என்று சொல்லலாம். புராணங்களின் கலப்பு பரிபாடல்களில் நிறையவே தெரியும். அதை வைத்து சங்ககாலத்தில் இப்படித்தான் இருந்ததென்று முடிவுக்கு வரக்கூடாது. சங்ககாலம் என்பதே சில நூற்றாண்டுகள்.

மேலே குறிப்பிட்ட நல்லந்துவனாரின் பாடலில் புரிநூல் அந்தணர்கள் திருவாதிரை நாளில் வேள்வி செய்ததையும் அவர்தம் பெண்டிர் அம்பாநீராடல் என்னும் சடங்கு செய்து தங்கள் துணிகளை வேள்வித் தீயில் உலர்த்திக் கொண்டதும் கூறப்படும். ஆனால் அதற்கு முந்தைய சங்கப்பாடல்களில் ஆதிரையும் அம்பாநீராடலும் வராது. முழுநிலவு நாளில் தைந்நீராடல் மட்டுமே உண்டு.

இப்படியாக வாழ்வியலோடு கலந்திருந்த தைந்நீராடல் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் சமயம் சார்ந்த சடங்காக மாறியது. அவரவரர் சமயத்திற்கு ஏற்ப கடவுள் வழிபாடு செய்யும் பாவை நோன்பு பிறந்தது இப்படித்தான். சைவம் சார்ந்து மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவையும் வைணவம் சார்ந்து ஆண்டாள் எழுதிய திருப்பாவையும் அப்படி எழுதப்பட்டவைதான். சமணம் சார்ந்த பாவை நூலும் உண்டு. அதற்குப் பெயர் பாவைப் பாட்டு. அதில் ஒரேயொரு பாட்டு மட்டும் தான் இப்பொழுது இருக்கிறது. அதுகூட யாப்பருங்கலக் காரிகை என்னும் நூலில் மேற்கோள் காட்டப்பட்டதால் கிடைத்தது.

சைவர்கள் கொண்டாடிய தைந்நீராடல்/பாவை நோன்பு திருவாதிரையில் தொடங்கி தைப்பூசத்தில் முடியும். கிட்டத்தட்ட தைந்நீராடல் காலகட்டம். அதாவது பாதி மார்கழியும் பாதி தையும். இன்று கேரளாவில் சிவனைக் கொண்டாடும் திருவாதிரை நாளில் பெண்கள் கூடி திருவாதிரைக்களி ஆடும் பண்டிகையாகவே இருப்பதும் பாவை நோன்பின் தொடர்ச்சியே என அறியலாம்.

ஆண்டாள் கொண்டாடிய பாவை நோன்பும் மார்கழி முழுநிலவு நாளில்தான் தொடங்குகிறது. அதை “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்ற திருப்பாவையின் முதல் வரியால் அறியலாம். ஆனால் இப்போது சைவர்களும் வைணவர்களும் முழுக்க முழுக்க மார்கழியிலேயே பாவைநோன்பு கொண்டாடுகிறார்கள். இது எந்தக் காலத்தில் மாறியது என்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இவை இப்படியிருக்க சமணப்பாவை நோன்பு முற்றிலும் அழிந்து போனது.

வாழ்வியல் கொண்டாட்டமாக இருந்து பக்தியும் கலந்த வழிபாடாக மாறிய பாவை நோன்பின் வரலாற்றுப் பரிணாமம் இதுதான்.

நன்றி
ஜிரா

Leave a comment